

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா பிரார்த்தனை செய்தார். இதைத் தொடர்ந்து ஆதி காமாட்சி அம்மன் கோயிலிலும் அவர் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம்:
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையில் நடைபெறும் தேர்தல். இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள், கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்து வீடியோ போடுபவர்களுக்கு வழக்கறிஞரை அனுப்பி உதவி செய்பவர்கள் இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது. திமுகவை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தா விட்டால் இந்துக்கள் தமிழகத்தில் கவுரவமாக வாழ முடியாது. மத்திய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் என்றால் திமுக இந்த தேர்தலில் வெற்றி பெறக் கூடாது.
கரோனா காலத்தில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் போய் சேராத வீடுகளே இல்லை என்றார்.