

புதுச்சேரியை ஒட்டியுள்ள சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வீடுர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், 4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (திங்கள்கிழமை) காலை திறக்கப்பட்டது. மொத்தம் 5400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதைக் காண ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
வீடுர் அணை சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு கடந்த 28.10.1959-ல் அப்போதைய முதல்வர் காமராஜர், அமைச்சர் கக்கனால் திறக்கப்பட்டது. ரூ.89 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த அணை மூலம் 3200 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
தொடர் மழையால் 32 அடி உயரமுள்ள இந்த அணையின் நீர்மட்டம் முழு அளவை எட்டத்தொடங்கியதால் அணைக்கு வரும் 5400 கன அடி நீரும் அப்படியே திறந்து விடப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டுகக்குப் பிறகு தற்போது அணை நிரம்பியதால் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ளது.
குவிந்த மக்கள்
வீடுர் அணை நிரம்பியுள்ளதை காண அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அதை காண குவிந்தனர். குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என பலரும் அணை நிரம்பியுள்ளதை ஆர்வமுடன் பார்த்தனர். அத்துடன் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலரும் அணையில் குவிந்திருந்தனர்.
நிரம்பும் ஏரிகள்
வீடுர் அணையின் பாசனபரப்பு 3200 ஏக்கராகும். இந்த அணையில் இருந்து தமிழகப்பகுதிகளில் 2,200 ஏக்கர் விவசாய நிலங்களும், புதுச்சேரியில் புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி, கேத்தாம்பாக்கம், லிங்காரெட்டிபாளையம் பகுதியில் ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசனவசதி பெறும். அணையில் இருந்து வரும் தண்ணீரால் ஊசுட்டேரி நிரம்பும். முதல்முறையாக காய்ந்து கிடந்த ஊசுட்டேரி தற்போது விரைவாக நிரம்பத்தொடங்கியுள்ளது.
(வீடுர் அணையைக் காண குவிந்த பொதுமக்கள்)
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நிலத்தடி நீரை சேமிக்கவும், விவசாயத்துக்காகவும், மணலிப்பட்டு, சுத்துக்கேணி , உறுவையாறு, பிள்ளைக்குப்பம் பகுதிகளில் ஆற்றின் குறுக்கே படுகை ஆணைகள் கட்டப்பட்டுள்ளன. வீடுர் அணையில் திறக்கப்பட்ட நீர், முதலில் மணலிப்பட்டு படுகை அணையை வந்தடைந்தது. அது முழுமையாக நிரம்பியவுடன், அடுத்து சுத்துக்கேணி படுகை அணையை அடைந்தது. அங்கு இடதுபுற கால்வாய் மூலம் புதுவையின் பெரிய ஏரியான ஊசுட்டேரிக்கும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது 63 சதவீதம் நீர் நிரம்பியுள்ளன. அதைத்தொடர்ந்து ஊசுட்டேரியும் விரைவாக நிரம்பி வருகிறது.
ஆற்றின் கடைமடைப்பகுதியில் உள்ள உறுவையாறு, பிள்ளைக்குப்பம் படுகை அணைகளும் நிரம்பி வழிகின்றன. இதைத் தொடர்ந்து உபரி நீர் அரியாங்குப்பம் வழியாக கடலில் சென்று கலக்கிறது" என்று தெரிவித்தனர்.