Published : 12 Jun 2014 10:00 AM
Last Updated : 12 Jun 2014 10:00 AM

ஊழல் வழக்கால் கார்த்தி சிதம்பரத்துக்கு சிக்கல்: தலைவர் கனவுக்கு செக் வைக்கும் எதிர் கோஷ்டியினர்

தமிழக காங்கிரஸின் புதிய தலைவராக கார்த்தி சிதம்பரம் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவர் மீது ராஜஸ்தான் சிபிசிஐடி போலீஸார் ஊழல் வழக்கு பதிவு செய்திருப்பது சட்டரீதியாக சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளரான பி.எஸ்.ஞானதேசிகன் உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், 38 இடங்களில் டெபாசிட்டை இழந்தது. தேர்தல் தோல்விக்கு ஞானதேசிகனே காரணம் என்று கூறி, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டனர்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வாசனின் ஆதரவாளர்களும் அறிக்கை வெளியிட்டனர். அதில், நாடு முழுவதும் காங்கிரஸ் தோல் விக்கு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே காரணம் என்று கூறியிருந்தனர். இந்த அறிக்கைப் போரால் தமிழக காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவராக கார்த்தி சிதம்பரத்தை கொண்டுவர, சிதம்பரம் அணியினர் முயற்சிப் பதாகவும், இதுபற்றி ராகுல் காந்தியிடம் பேசி, இளந்தலைவர் ஒருவரை தமிழகத்தில் நியமித்து கட்சியை வலுப்படுத்தலாம் என்று வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் அரசியல் வளர்ச் சிக்குத் தடையாக, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கார்த்தி சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்ணா, ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட் மற்றும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் மீது ராஜஸ்தான் மாநில சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ரவி கிருஷ்ணாவுக்கு சொந்தமான சிகித்சா ஹெல்த் கேர் என்ற நிறுவனம், ராஜஸ் தான் மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கியதில் ரூ.14 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது. சிகித்சா நிறுவனத்தில் கார்த்தி சிதம்பரமும் ஒரு இயக்குநர் என்பதால் அவர் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையறிந்த ப.சிதம்பரத்தின் எதிர்கோஷ்டியினர், கார்த்தி மீதான வழக்கு குறித்து மேலிடத்துக்கு புகார் அனுப்பத் தயாராகி வருகின்றனர். ஒரு சிலர் இந்த வழக்கு குறித்த தகவல்களை மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர். இது கார்த்தி சிதம்பரத்தின் அரசியல் வளர்ச்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என அவர்கள் கூறுகின்றனர்.

ஊழல் வழக்கு குறித்து, கார்த்தி சிதம்பரத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘இந்த வழக்கு குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்ப வில்லை. வழக்கு விவகாரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் கவனித்துக் கொள்ளும்’’ என்று மட்டும் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x