

கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சென்னையில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
இதில், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று தங்கள் ஆதரவை நேரில் வெளிப்படுத்தினர்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடகம் மறுத்து வருகிறது. மேகேதாட்டுவில் இரு தடுப்பணைகளை கட்டவும் கர்நாடகம் முயற்சித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங் களில் விவசாயம் பாதிக்கப் பட்டுள்ளது.
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டுக் குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
விவசாயிகள் போராட்டத்துக்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரித்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.