Published : 01 Nov 2015 02:59 PM
Last Updated : 01 Nov 2015 02:59 PM

மின் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வைகோ கோரிக்கை

மின் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக மின்சார வாரியத்தால் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பணியிடங்கள் 39 ஆயிரத்து 293 என்று கடந்த ஏப்ரலில் வரையறுக்கப்பட்டது. மேலும், களத் தொழிலாளர்கள் 90 ஆயிரத்து 508 பேர் ஆவார்கள். இதன்படி பார்த்தால் வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 801 ஆகும். இதில் ஒப்பந்தப் பணியாளர்கள் அடக்கமில்லை.

ஆனால், மின்வாரியத்தில் சுமார் 68 ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிகிறார்கள். இதனால், மின்தடை, பழுது போன்றவற்றை சீர் செய்யப் போதிய பணியாளர்கள் இல்லை தடையற்ற மின்சாரம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதோடு, அதிகமான பணிச்சுமை காரணமாக விபத்துகளில் சிக்கி தொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர். மின் விநியோகப் பணியில் ஒருவர் இரண்டு மற்றும் மூன்று ஷிப்டுகள் வேலை செய்கிறார்கள்.

சென்னை மின் விநியோக வட்டத்தில் வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட களப்பணியாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 196. ஆனால், காலிப் பணியிடங்கள் கிட்டத்தட்ட ஆயிரம் என்றுள்ளது. எனவே, மின் வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். தற்போது பணியாற்றி வருகிற சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக அமர்த்திட வேண்டும். அவர்களுக்கும் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 30 சதவீதம் வழங்க வேண்டும். நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x