

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 9 தொகுதி களுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கி வரும் 19-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் இன்று (12-ம் தேதி) காலை 11 மணிக்கு தொடங்கி வரும் 19-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மனுத்தாக்கல் இல்லை. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காட்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் புண்ணியகோட்டி (94445-23225), வேலூர் தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் (94450-00417), அணைக்கட்டு தொகுதிக்கு கலால் உதவி ஆணையர் வெங்கட்ராமன் (94448-38637), கே.வி.குப்பம் (தனி) தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் பானு (94450-00184), குடியாத்தம் (தனி) தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் (97911-49789) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டாட்சியர் அலுவலகங்களில் மனுக்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காட்பாடி, வேலூர்,அணைக்கட்டு மற்றும் கே.வி.குப்பம் (தனி) தொகுதிகளுக்கு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களிலும் குடியாத்தம் (தனி) தொகுதிக்கு மட்டும் பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் (தனி) தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் (93608-79271), சோளிங்கர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பார்த்தசாரதி (88259-89128), ராணிப்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக சார் ஆட்சியர் இளம் பகவத் (94450-00416), ஆற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை (73580-90173) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரக்கோணம் தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவ லகம், சோளிங்கர் தொகுதிக்கு நெமிலி வட்டாட்சியர் அலுவலகம், ராணிப்பேட்டை தொகுதிக்கு சார் ஆட்சியர் அலுவலகம், ஆற்காடு தொகுதிக்கு ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
மனுத்தாக்கல் விதிமுறைகள்
தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்பவர்கள் பொது தொகுதிக்கு ரூ.10 ஆயிரம், தனி தொகுதிக்கு ரூ.5 ஆயிரம் தொகையை ரொக்கமாக அல்லது கருவூலமாக செலுத்தப்பட்ட சலானை சமர்ப்பிக்க வேண்டும். மனுத்தாக்கல் செய்பவருடன் இரண்டு பேர் மட்டுமே அனுமதிக் கப்படுவார்கள். மனுத்தாக்கல் செய்யும் அலுவலக வளாகத்தில் 100 மீட்டர் வரை தடை செய்யப்பட்ட பகுதியில் ஒரு வேட்பாளருக்கு இரண்டு வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி. மனுத்தாக்கல் செய்ய வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
வேட்பாளர்களுக்கான விதிகள்
மனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தனி வங்கிக் கணக்கு தொடங்கி அதன் விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் மனுத்தாக்கலுக்கு ஒரு நாள் முன்னதாக வங்கிக் கணக்கு தொடங்கி இருக்க வேண்டும். தேர்தல் செலவுகள் அனைத்தும் இந்த வங்கிக் கணக்கு மூலமாக செய்ய வேண்டும். தேர்தலில் வேட்பாளரின் செலவு அதிகபட்சமாக ரூ.30 லட்சத்து 80 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.