பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக: லால்குடி வேட்பாளர் வாபஸ்
அதிமுக சார்பில் பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் தனி தொகுதியில் இரா.தமிழ்ச்செல்வன், தஞ்சாவூரில் வி.அறிவுடைநம்பி போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், அதிமுக முதற்கட்டமாக 6 வேட்பாளர்களையும் 2ம் கட்டமாக 171 வேட்பாளர்களையும் அறிவித்தது. அதிமுக சார்பில் இன்னும் பத்மநாபபுரம் தொகுதிக்கு மட்டுமே வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதிமுக தரப்பில் தற்போது 180க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்களை கட்சியின் ஒருங்கிணைபாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக அறிவித்தனர்.
லால்குடி வேட்பாளர் வாபஸ்:
ஏற்கெனவே லால்குடி தொகுதிக்கு அதிமுக சார்பில் ராஜாராம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமாகாவுக்கு அத்தொகுதி வழங்கப்பட்டது. இதனால், வேட்பாளர் ராஜாராம் திரும்பப்பெறப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது. அதிமுக கூட்டனியில் பாமக 23, பாஜக 20, தமாகா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
