Published : 11 Mar 2021 07:43 PM
Last Updated : 11 Mar 2021 07:43 PM

சொந்தப்பகையில் பெண்ணை வீடு புகுந்து தாக்கி கைது: பெண் ஆய்வாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம்

லஞ்சம் பெற்றும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை என புகார் அளித்த பெண்ணை கைது செய்த உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

உளுந்தூர்பேட்டை மாவட்டம் இருந்தை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரி ஜெகநாதனுக்கும், பக்கத்து வீட்டிலிருந்த ராசாமணி உள்ளிட்டோருக்கும் இடையே சொத்து தகராறில் பாதிக்கப்பட்ட சுந்தரி திருநாவலூர் காவல் நிலையத்தில் 2017-ம் ஆண்டு டிசம்பரில் புகார் அளித்துள்ளார். அதில் வழக்கு பதிவு செய்ய உதவி ஆய்வாளரார் எழிலரசி ( தற்போது உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளராக இருக்கிறார் ) 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் 2 ஆயிரத்தை கொடுத்த பின்னரும் வழக்கு பதியாததால், அப்போதைய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சுந்தரி புகார் அளித்தார்.

இந்நிலையில், இரு குடும்பத்தாருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், அதில் வழக்கு பதியபட்டு, சுந்தரி, அவரது மகன் காமராசு மற்றும் சிலரை காவல்துறையினர் வீடு புகுந்து தாக்கி, கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த சுந்தரி, முன்விரோதம் காரணமாக தன்னை கைது செய்து சிறையில் அடைத்தாக திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசி, தலைமை காவலர் முருகராஜ் ஆகியோருக்கு எதிராக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் 2018-ம் ஆண்டில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மூ.பழனிமுத்து ஆஜராகி வாதிட்டார். பின்னர் உத்தாவு பிறப்பித்த ஆணைய உறுப்பினரான துரை. ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், ஆய்வாளர் எழிலரசியின் கைது நடவடிக்கையில் மனித உரிமை மீறல் இருப்பது நிரூபணமாவதாக கூறி, பாதிக்கப்பட்ட சுந்தரிக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீட்டை 4 வாரத்தில் வழங்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டதுடன், இந்த தொகையை ஆய்வாளர் எழிலரசியின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய அனுமதித்துள்ளார்.

மேலும் தலைமை காவலர் முருகராஜ் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இல்லை என்பதால் அவருக்கு எதிரான வழக்கை மட்டும் தள்ளுபடி செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x