

கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை 27 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்தார்.
ரத்தத்தில் உள்ள கழிவுகளை சுத்திகரிப்பது, உடல் இயக்கத்துக்கு எவ்வளவு உப்பு மற்றும் நீர் தேவையா அதை மட்டும் எடுத்துக்கொண்டு ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது, அதிகப்படியான நீரை வெளியேற்றுவது, ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வது எலும்புகளை வலுவாக வைத்திருப்பது போன்ற பணிகளைச் செய்கிறது சிறுநீரகங்கள். மேலும், உணவில் சேர்க்கும் சோடியம், பொட்டாசியம் போன்றவற்றை சரியான அளவில் சமன் செய்து, ரத்தத்தில் உள்ள வேதிப்பொருட்களின் அளவை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. இவற்றில் ஒரு செயல்பாடு பாதிக்கப்பட்டாலும் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, உலக சிறுநீரக தினத்தை (மார்ச் 11) முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இது தொடர்பாக, மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது:
"கோவை அரசு மருத்துவமனையில் ரத்தசுத்திகரிப்பு, பெரிடோனியல் டயாலிசிஸ் சுத்திகரிப்பு, பிளாஸ்மா சுத்திகரிப்பு போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சிறுநீரகவியல் துறையில் 25 ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ளன. மாதந்தோறும் சுமார் 1,000 தடவை ரத்தசுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 25 நோயாளிகளுக்கு அவர்களது ரத்தம் சம்மந்தப்பட்ட உறவினர்களிடம் இருந்து சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 2 நோாயளிகளுக்கு மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் கரோனா நோயாளிகளுக்கு 878 தடவை ரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளது. 85 நோயாளிகளுக்கு பெரிடோனியல் டயாலிசிஸ் முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே சிறுநீரகம் பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம். நாள்பட்ட ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள் சிறுநீரகம் சார்ந்த மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதேபோல, சிறுநீரக பாதிப்பை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதும் பாதிப்பை தடுக்க உதவும்".
இவ்வாறு அவர் கூறினார்.