

நாங்கள் 100% தமிழ் மக்களை நம்புகிறோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சீமான் பேசும்போது, மாற்றத்துக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அரை நூற்றாண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு மாற்றாக தான் நாங்கள் கட்சியை தொடங்கியுள்ளோம். அவ்வாறு இருக்கையில் அந்த கட்சிகளுடன் எவ்வ்வாறு கூட்டணி வைத்து கொள்ள முடியும். அந்த தவறை செய்ய நான் தயாராக இல்லை. நாங்கள் 100% நான் தமிழ் மக்களை நம்புகிறேன்.
அதனால்தான் நான் தனித்து நிற்கிறேன். எந்த குழப்பமும் இல்லாமல் இத்தேர்தலில் ஒரு கட்சி பயணிக்கிறது என்றால் அது நாம் தமிழர் கட்சிதான்” என்று பதிலளித்துள்ளார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சிஏ.திடலில் நடந்த நிகழ்ச்சியில் 234 தொகுதிகளுக்கும் நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களுக்குச் சரிசமமாகத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் சீமான், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 117 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். வழக்கம்போல இத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.