Published : 11 Mar 2021 04:34 PM
Last Updated : 11 Mar 2021 04:34 PM

ஒவ்வொரு தேர்தலிலும் என் பெயர் அடிபடுகிறது; வருத்தமோ, மகிழ்ச்சியோ இல்லை: குஷ்பு பேட்டி 

ஒவ்வொரு தேர்தலிலும் என் பெயர் அடிபடுகிறது, நான் பிரச்சாரம் செய்து வரும் திருவல்லிக்கேணி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படாததில் வருத்தமோ மகிழ்ச்சியோ இல்லை என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட பாஜக முடிவு செய்தது. இதற்காகப் பல மாதங்களுக்கு முன்னரே குஷ்பு அங்கு தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். குஷ்பு அங்கு தேர்தல் பணிமனையை உருவாக்கி, தினமும் வந்து அமர்ந்து தொண்டர்களின் குறைகளைக் கேட்டார்,

இதற்கிடையே பாமகவுக்கு சேப்பாக்கம் / திருவல்லிக்கேணி தொகுதி என்று அதிமுக அறிவித்தது. இது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பேட்டி:

எனக்கு இது பழகிவிட்டது. இந்தத் தேர்தல் எனக்குப் புதிதில்லை. இதற்கு முன்பு இரண்டு மக்களவைத் தேர்தல்களையும் இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களையும் பார்த்தவள் நான். ஒவ்வொரு தேர்தலிலும் என் பெயர் அடிபடும். நான் போட்டியிடுகிறேன் என்று நீங்களே (ஊடகங்கள்) முடிவு செய்துகொள்வீர்கள். இடம் கிடைக்கவில்லை என்றால் நான் வருத்தத்தில் இருக்கிறேன் என்றும் நீங்களே சொல்வீர்கள்.

இதில் எனக்கு எந்த வருத்தமும் மகிழ்ச்சியும் கிடையாது. தொகுதி கிடைத்தால் சரி. இல்லாவிட்டாலும் கட்சி ஜெயிக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

துறைமுகம், ஆயிரம் விளக்கு தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

எனக்கு அதுபற்றித் தெரியாது. நான் சேப்பாக்கம் / திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறேன், அதனால் வீடுவீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரத்தைச் செய்து வருகிறேன். என் வேலையை நான் பார்த்து வருகிறேன்.

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

நிச்சயமாக அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு வீடாகச் செல்லும்போது மக்களின் உணர்வைப் புரிந்துகொள்ள முடிந்தது. நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x