

கூடுதல் தொகுதி கேட்பதால் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு நிறைவடையும் முன்னரே நேர்காணலை புதுச்சேரி பாஜக இன்று தொடங்கியது.
புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
என்.ஆர்.காங்கிரசுக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டு கையெழுத்தாகிவிட்டது. மீதமுள்ள 14 தொகுதிகளில் அதிமுகவுக்கு 4 தொகுதிகள், 10 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என தெரிகிறது. இதனால், அதிமுக கூடுதல் தொகுதி கோரியுள்ளது. இதன்காரணமாக, தொகுதி பங்கீட்டை பாஜகவால் நிறைவு செய்ய முடியவில்லை.
அதிமுக அதிருப்தியில் உள்ள நிலையில், புதுவை பாஜக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று (மார்ச் 11) நேர்காணல் தொடங்கியது. சுமார் 260 பேர் விருப்ப மனு தந்துள்ளனர். அவர்களை பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் மேலிட பொறுப்பாளர்கள் நிர்மல்குமார் சுரானா, ராஜுசந்திரசேகர் எம்.பி., மத்திய இணையமைச்சர் அர்ஜுன் மேக்வால், பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
இது பற்றி, கட்சி நிர்வாகிகள் கூறுகையில், "30 தொகுதிகளில் இருந்தும் 260 பேர் வரை விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு தொகுதிக்கு 3 பேர் என வீதம் தேர்வு செய்யப்பட்டு கட்சி தலைமைக்கு பட்டியல் அனுப்பப்பட உள்ளது. பாஜக போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டவுடன், வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தனர்.