

காங்கிரஸ்- திமுக கூட்டணியில் புதுச்சேரி தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி நிலவுகிறது. இரு கட்சிகளும் அதிக தொகுதிகளை கோருவதால் முடிவு இதுவரை எட்டப்படவில்லை.
புதுவை காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீடு இறுதிபெறவில்லை. புதுவையில் 2 சுற்று பேச்சுவார்த்தை நடந்த நிலையில் எந்த முடிவும் எட்டப்படாததால் சென்னையில் பேச்சுவார்த்தையை தொடர்ந்தனர். கடந்த 3 நாட்களாக சென்னையில் தொடர்ந்து புதுவை காங்கிரஸாரும், திமுகவின் 2ம் கட்ட தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காங்கிரசிலிருந்து பலரும் வெளியேறியதை சுட்டிக்காட்டி தொடர்ந்து திமுகவினர் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தலா 14 தொகுதிகளில் காங்கிரஸ், திமுக போட்டியிடுவது என்றும், கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வழங்குவது என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதுகுறித்து கட்சித் தலைமையிடம் பேசிவிட்டு முடிவு தெரிவிப்பதாக புதுவை காங்கிரஸார் தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சித்தலைமை குறைந்தபட்சம் 18 தொகுதிகளை கேட்டுப் பெற அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை புதுவை காங்கிரஸார், திமுக தலைவர்களிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் தொடர் இழுபறி நீடிக்கிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் கூட்டணி தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு இரு கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளனர். தொகுதி பங்கீட்டில் தங்களுக்கு இடம் தராவிட்டால் தனித்து 4 தொகுதிகளில் போட்டி என்ற முடிவையும் சிபிஎம் எடுத்துள்ளது. இதனால் கடும் குழப்பம் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் நிலவுகிறது.