Published : 11 Mar 2021 02:09 PM
Last Updated : 11 Mar 2021 02:09 PM

திமுக கூட்டணிக்கு ஆதரவு; சீட் இல்லை என்ற வருத்தம் இருந்தாலும் மதச்சார்பற்ற வாக்குகள் சிதறக்கூடாது: தமிமுன் அன்சாரி பேட்டி

கடந்த தேர்தலில் அதிமுக அணியில் வெற்றிப்பெற்ற மஜக கட்சித்தலைவர் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணியில் இணைந்து இடம் கேட்ட நிலையில் பின்னர் விலகினார். இந்நிலையில் திடீரென திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியிலிருந்து விலகி மனித நேய ஜனநாயக கட்சி என்கிற கட்சியைத் தொடங்கிய தமிமுன் அன்சாரி அதிமுக கூட்டணியில் இணைந்தார். நாகை தொகுதியில் நின்று தேர்வு செய்யப்பட்ட தமிமுன் அன்சாரி ஜெயலலிதா மறைவுக்குப்பின் அவ்வப்போது தனியரசு, கருணாசுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.

தமிழக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வந்தார், தனியாக செயல்பட்டு வந்தார். பின்னர் அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் அதிமுக கூட்டணியை எதிர்த்து வந்தார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்தார்.

அவருக்கு ஒரு தொகுதி அளிக்கப்படும் என எதிர்ப்பார்த்த நிலையில் தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதனால் திமுக கூட்டணியிலிருந்து விலகலாம் என தகவல் வெளியான நிலையில் இன்று திமுக தலைவரை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். சில கோரிக்கைகள் வைத்துள்ளதாகவும் அதை நிறைவேற்றித்தரும்படி கோரிக்கை வைத்ததாக தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

“ மனித நேய ஜனநாயக கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. அதில் தலைமை நிர்வாகத்தினர் கூடி தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதித்தோம். இன்றைய சூழ்நிலையில் மதவாதத்துக்கும், பாசிசத்துக்கும் எதிராக ஓரணியாக திரண்டு நிற்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதை விவாதித்தோம்.

பாசிச, சமூக நீதி சக்திகளுக்கு எதிரான வாக்குகள், மதச்சார்பின்மைக்கு எதிரான வாக்குகள் சிதறிப்போய்விடக்கூடாது என்கிற உன்னத லட்சியத்தை கட்டிக்காப்பாற்ற வேண்டிய முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவளிக்கும் விதத்தில் அதன் தலைவர் ஸ்டாலினை சந்தித்து 5 அம்ச அடிப்படையில் ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருந்தோம்.

தேர்தல் தொகுதி பங்கீடு குறித்தும் குறிப்பிட்டிருந்தோம். தேர்தல் அரசியலில் தொகுதி பங்கீடு மிக முக்கியம் அது கிடைக்காத சூழ்நிலையில் அதனால் வருத்தமுற்று சர்ச்சையாகி அதனால் மதச்சார்பற்ற வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்கிற நிலையில் 5 அம்ச கோரிக்கைகளை அளித்து ஆதரவை வழங்கியுள்ளோம்.

* 10 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக்கைதிகளை திமுக ஆட்சி அமைந்தவுடன் பரிசீலித்து விடுதலை செய்திட வேண்டும்.

* பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல் படுத்தவேண்டும்.

*சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும்.

* சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

*குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஆகிய 5 அம்ச கோரிக்கைகளுடன் ஆதரவு தெரிவித்தோம். கூட்டணியின் எங்களுக்கு தொகுதி இல்லை என்கிற வருத்தம் இருந்தாலும் மதச்சார்பற்ற வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதற்காக ஆதரவை தெரிவித்துள்ளோம்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x