Published : 11 Mar 2021 01:06 PM
Last Updated : 11 Mar 2021 01:06 PM

நல்ல கட்சி என்பதால் இணைந்தேன்: பாஜகவில் இணைந்த பின்பு செந்தில் பேட்டி

நகைச்சுவை நடிகர் செந்தில் இன்று பாஜகவில் இணைந்தார். நல்ல கட்சியில் இணைய வேண்டும் என்பதால் பாஜகவில் இணைந்ததாக அவர் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு முன்பு வரை, அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர் நடிகர் செந்தில். அவரது மறைவுக்குப் பின்னர், 2019-ல் செந்தில் தன்னை அமமுகவில் இணைத்துக்கொண்டார். அங்கு, அவருக்கு கட்சி அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் கட்சி பணிகளில் ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கியிருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்கி, டிசம்பர் 2020-ல், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், செந்தில் இன்று (மார்ச் 11) தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில், பாஜகவில் இனைந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் செந்தில் பேசுகையில், "1988-ல் இருந்து அதிமுகவில் இருந்தேன். ஜெயலலிதா இருந்தவரை அக்கட்சியில் நட்சத்திர பேச்சாளராக இருந்தேன். இப்போது எந்த கட்சிக்கு போவது என தெரியாத நிலை இருந்தது. ஒரு நல்ல கட்சிக்கு செல்ல வேண்டும் என விரும்பினேன். பாஜக தான் நல்ல கட்சி, எல்லோருக்கும் என்னென்ன கிடைக்க வேண்டுமோ, அவையெல்லாம் கிடைக்கும் என எண்ணி, பாஜகவில் சேர நினைத்தேன். அதனால், பாஜகவில் இணைந்துவிட்டேன்.

இன்னும் பலர் பாஜகவில் இணைவார்கள். பாஜகதான் இனி வளரும். வேறு எந்த கட்சியையும் இனி யாரும் நம்ப மாட்டார்கள். நாட்டு மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதை பாஜக செய்யும். ஊழல் செய்பவர்களை தட்டிக் கேட்பார்கள். ஊழலற்ற ஆட்சியாக பாஜக இருக்கிறது. கண்டிப்பாக இந்த கட்சி காலூன்றும்.

அதிமுகவுக்காக சேவல் சின்னத்தில் பேசும்போதெல்லாம் யாரும் இல்லை. ஜெயலலிதா இருந்தவரை நான் தான். இப்போது வந்திருப்பவர்கள் மத்தியில் நான் ஆரம்பத்திலிருந்து கட்சியில் இருந்திருக்கிறேன். எனக்கு ஏதோ பிடிக்கவில்லை, அதனால் அதிமுகவிலிருந்து ஒதுங்கிவிட்டேன்" என்றார்.

அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்வீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தலைமை சொல்வார்கள்" என பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x