

கே.டி.ராஜேந்திர பாலாஜிதான் அதிமுகவா? சிவகாசியில் போட்டியிட தைரியமில்லாமல் ஏன் தொகுதி மாறி ஓடுகிறார் என அதிமுகவில் சீட்டு கிடைக்காததால் அமமுகவில் இணைந்த சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் கேள்வி எழுப்பினார்.
சிவகாசி தொகுதியில் ராஜேந்திர பாலாஜி போட்டியிட்டால் தோல்வி அடைவார் என அதிமுகவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எதிர்த்து குரல் கொடுத்ததால் ஓரங்கட்டப்பட்டார் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன். தனக்கு ராஜேந்திர பாலாஜி கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் பகீரங்கமாக குற்றம் சாட்டினார். அதன் பின்னர் அவர் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளித்து நேர்க்காணல் சென்றார்.
ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட சாத்தூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை, ரவிச்சந்திரன் அறிவிக்கப்பட்டார். அவர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர் என்று ராஜவர்மன் குற்றம்சாட்டினார். உழைப்புக்கு கட்சியில் மதிப்பில்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை டிடிவி தினகரனை நேரில் சந்தித்து அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
ராஜேந்திர பாலாஜி அதிமுகவா? அதிமுகவை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. சிவகாசியில் நின்று போட்டியிட தைரியமில்லாத ராஜேந்திர பாலாஜி ஏன் ராஜபாளையம் தொகுதிக்கு தாவினார் என்று கேள்வி எழுப்பினார். தான் சாத்தூர் தொகுதி கேட்டு அமமுகவில் விருப்பமனு அளித்துள்ளேன், வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன் என்றார்.
இதேப்போன்று அதிமுகவில் அதிருப்தியாளர்கள் பிரபு, கலைசெல்வன், ரத்ன சபாபதி உள்ளிட்டோரும் தினகரனை சந்திக்க வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.