

நடைபெறவுள்ள சட்டப்பேரைவத் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளிக்காததால் கள்ளக்குறிச்சி மற்றும் விருத்தாசலம் அதிமுக எம்எல்ஏ-க்களின் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
171 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று (மார்ச் 10) மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, கள்ளக்குறிச்சி தனித் தொகுதிக்கு அதிமுக மாவட்ட அமைப்புச் சாரா அணியின் செயலாளர் எம்.செந்தில்குமார் அறிவிக்கப்பட்டார். இதையறிந்த அதிமுகவினர் நேற்று இரவு கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இன்று (மார்ச் 11) காலை கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் திரண்ட கள்ளக்குறிச்சி நகர அதிமுக செயலாளர் பாபு மற்றும் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வெங்கடேசன் என்ற அதிமுக நிர்வாகி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அதிமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் என கோஷமிட்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது, அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்
இதேபோன்று, விருத்தாசலம் தொகுதி, கூட்டணி கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, விருத்தாசலம் அதிமுக எம்எல்ஏ ஆதரவாளர்கள் மீண்டும் கலைச்செல்வனுக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியறுத்தி விருத்தாசலம் பாலக்கரை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, அமைச்சர் சம்பத்துக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர், போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மற்றும் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ-க்களான பிரபு மற்றும் கலைச்செல்வன் ஆகியோர், கடந்த 2017-ம் ஆண்டு தினகரன் அணிக்குச் சென்றுவிட்டு, 2019-ம் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.