

ஈபிஎஸ் என்ன எம்ஜிஆரா இல்லை, ஜெயலலிதாவா, ஏன் அவருக்கு அத்தனை ஆணவம் என்று விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக எனப் பல முனைகளாக இந்தத் தேர்தலில் போட்டி நிலவுகிறது. கேட்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்ததால், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக கடந்த 9-ம் தேதி விலகியது.
இதற்கிடையே கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேற்று மாலை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
''நானும் என்னுடைய மாமாவும் (எல்.கே.சுதீஷ்) அதிமுகவையோ, அதன் தொண்டர்களையோ, அமைச்சர்களையோ ஏன் அமைச்சர் ஜெயக்குமாரையோ கூட விமர்சிக்கவில்லை. பழனிசாமியை மட்டுமேதான் விமர்சித்தோம்.
அவர் என்ன எம்ஜிஆரா இல்லை ஜெயலலிதாவா, ஏன் அவருக்கு அத்தனை ஆணவம்? இவ்வளவு நாட்களாக அவர் எம்எல்ஏவாகத்தான் இருந்தார். இன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்த அமைச்சர், முதல்வர். அவரின் வயதுக்கு நான் மரியாதை கொடுக்கிறேன். அதற்காக உங்களின் காலடியில் விழுந்து கிடக்க நாங்கள் ஆளில்லை.
எங்களுக்கு அதிமுகவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்பதை ஆணித்தரமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மீண்டும் அதிமுக பக்கம் போகமாட்டோம்.
எதற்காக தேமுதிக ஆரம்பிக்கப்பட்டதோ அதற்கான நோக்கத்தை நான் நிறைவேற்றுவேன். என் அப்பாவை சிம்மாசனத்தில் உட்கார வைப்பேன். என்னை அடையாளப்படுத்திக் கொள்ள எனக்கு ஆயிரம் இடங்கள் இருக்கிறது. ஆயிரம் வழிகள் உள்ளன. உழைக்கத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம். பிழைக்க அரசியலுக்கு வரவில்லை.''
இவ்வாறு விஜய பிரபாகரன் தெரிவித்தார்.