

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், கூட்டணியில் இருந்து விலகுவதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டு வருவதாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, தங்கள் கூட்டணியில் இணையுமாறு தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கிடையே அமமுக, தேமுதிகவுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது எதற்குமே இதுவரை தேமுதிக பதிலளிக்கவில்லை. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2004-ல் அரசியலில் அடி எடுத்து வைத்த விஜயகாந்த், கடவுளுடனும் மக்களுடனும் மட்டுமே கூட்டணி என அறிவித்து 2006-ல் தனித்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் 27 லட்சத்து 66 ஆயிரத்து 223 வாக்குகளை தேமுதிக பெற்றது. வாக்கு சதவீதம் 8.45 ஆகும். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக அனைத்து தொகுதியிலும் தோற்றது. பெற்ற வாக்குகள் 31 லட்சத்து 26 ஆயிரத்து 117. வாக்கு சதவீதம் 10.
2011-ல் அதிமுக கூட்டணியில் இணைந்தார் விஜயகாந்த். 29 இடங்களை வென்ற தேமுதிக பெற்ற வாக்கு சதவீதம் 7.88 ஆகும். 2014-ம் ஆண்டு தேர்தலில் தேமுதிகவால் ஒரு இடம்கூட வெல்ல முடியவில்லை. அந்தத் தேர்தலில் தேமுதிக வாக்கு வங்கி சரிந்தது. 20 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று 5.19 சதவீதமாக குறைந்தது 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகள் 10 லட்சத்து 34 ஆயிரத்து, 384. வாங்கிய வாக்கு சதவீதம் 2.41. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.