

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாகக் கருத்து கணிப்பு முடிவுகள் பலவும் சுட்டிக்காட்டுகின்றன.
1980களில் இருந்தே கேரளாவில் யுடிபி, எல்டிஎஃப்பி மாறிமாறி ஆட்சி அமைத்துவரும் நிலையில் இந்த முறை மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணிக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று, ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது காங்கிரஸ்.
இந்நிலையில், தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி கடும் போட்டிபோட வேண்டியிருக்கும் என சசிதரூர் கூறியிருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், இந்தமுறை தேர்தல் மிகவும் சவாலாக இருக்கப்போகிறது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு கடினமான தேர்தலாக அமைந்துள்ளது. ஆனாலும், நிச்சயமாக காங்கிரஸ் வெல்லும் என்றார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து பி.சி.சாக்கோ விலகியுள்ளது கேரள காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் சசிதரூரின் கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.