Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM

தங்கம், வெள்ளி, மதுபானங்கள் உட்பட ரூ.45 கோடியே 55 லட்சம் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

தமிழகத்தில் மார்ச் 9-ம் தேதி வரை ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.45 கோடியே 55 லட்சத்து 83 ஆயிரம் பணம், தங்கம், மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், கடந்த பிப்.26-ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அன்று முதலே தொகுதிக்கு தலா 3 பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு முறைகேடாக கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதுதவிர, வருமான வரித்துறையும் தங்களுக்கு கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் அவ்வப்போது சோதனைகள் நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் 9-ம் தேதி வரை பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:

பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழு மற்றும் காவல் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.16 கோடியே 9 லட்சத்து 88 ஆயிரம், வருமானவரித் துறை சோதனையில் ரூ.13 கோடியே 35 லட்சத்து 84 ஆயிரம் என மொத்தம் ரூ.29 கோடியே 45 லட்சத்து 72 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், ரூ.34 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள ரூ.12,746 .72 லிட்டர் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், ரூ.15 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ.13 கோடியே 81 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள 35 கிலோ 331 கிராம் தங்கம், ரூ.1 கோடியே 1 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள 164.48 கிலோ வெள்ளி, ரூ.50 ஆயிரம் மதிப்பு இதர வகை உகோகங்கள் என மொத்தம் ரூ.14 கோடியே 82 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை தவிர, சேலைகள், துணி வகைகள், இதர பொருட்கள், வெளிநாட்டு பணம் என ரூ.77 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ளவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்டுள்ள மொத்த பணம், பொருட்களின் மதிப்பு ரூ.45 கோடியே 55 லட்சத்து 83 ஆயிரம் ஆகும். இதன்மூலம் 9-ம் தேதி மட்டும் ரூ.10 கோடியே 24 லட்சத்து ஆயிரம் மதிப்பு பணம், நகைகள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x