

தேர்தல் பிரச்சாரத்தின்போது, மாணவன் கேட்ட தடகளப் போட்டிக்கான ஷூவை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாங்கி அனுப்பி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திதேர்தல் பிரச்சாரம் செய்தார். முளகுமூடு பள்ளிக்கு சென்றபோது, பரைக்கோடு என்னும் இடத்தில் வாகனத்தை நிறுத்தி நடந்து சென்றார். அங்கு காமராஜர் படத்துடன் நின்றிருந்த மாணவனுடன் அமர்ந்து தேநீர் அருந்தியவாறு பேசிக் கொண்டிருந்தார். அந்த மாணவன் அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டனி சேவியர் என்பவரது மகன் ஆண்டனி பெலிக்ஸ் (11) என்பது தெரியவந்தது.
தடகளப் போட்டியில் சாதனைபுரிவதே லட்சியம் என்றும், தடகளப் பயிற்சிக்கான ஷூ தன்னிடம் இல்லை என்றும், மாணவன் கூறியுள்ளான். ஸ்போர்ட்ஸ் ஷீவை வாங்கி அனுப்புவதாக, ராகுல் காந்தி உறுதி கூறியுள்ளார்.
அதன்படி, மாணவன் ஆண்டனி பெலிக்ஸின் வீட்டுக்கு ரூ.5,900 விலையுள்ள ஷூ தபாலில் நேற்று வந்தது. இதுகுறித்து, சிறுவன் ஆண்டனி பெலிக்ஸ் கூறும்போது, ``அழகிய மண்டபத்தில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறேன். எனது தந்தை தையல் கடைவைத்துள்ளார். 2017-ம் ஆண்டில் திருச்சியில் நடைபெற்ற சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டியில் 51-வது இடத்தை பெற்றேன். நாகர்கோவிலில் கடந்த ஆண்டு நடந்த மாரத்தானில்11-வது இடத்தை பெற்றுள்ளேன். ராகுல் காந்தியிடம் இதனை கூறினேன். அவர் என்னிடம் பேசி ஊக்கப்படுத்தினார். அவர் கூறியவாறு கூரியரில் ஷூ கிடைத்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இதையடுத்து எனக்கு போன் செய்து பேசிய ராகுல் காந்தி ஷூ அளவு சரியாக இருக்கிறதா? பிடித்திருக்கிறதா? என கேட்டார். மேலும், தடகளப் பயிற்சி பெறுவதற்கு பயிற்சியாளரை விரைவில் ஏற்பாடு செய்து தருவதாக என்னிடம் உறுதியளித்தார். என் வாழ்நாளில் இதை மறக்க மாட்டேன். தடகளப் போட்டியில் சாதிப்பேன் என நெகிழ்ச்சியுடன் கூறினார் மாணவன் ஆண்டனி பெலிக்ஸ்.