

வாட்ஸ்ஆப் தகவல்கள் மூலம் மதுரையில் இந்த ஆண்டு கொலைகள் குறைந்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்தார்.
மதுரை தல்லாகுளம் பழைய அக்ர ஹாரத்தை சேர்ந்த துபாய் பொறியாளர் ஜெயக்குமார் மனைவி பவித்ரா நகைக்காக கொலை செய்யப்பட்டார். பெண்களை குறிவைத்து தொடர்ந்து கொலைகள் நடந்தன.
சொத்துப் பிரச்சினை, முன்விரோதம், குடிபோதை உள்ளிட்ட பல்வேறு காரணங் களுக்காவும் மாதந்தோறும் கொலைகள் நடந்துவந்ததால் அதிகளவு கொலை நடப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது. இதனால் மதுரை பொதுமக்களுக்கு பாதுகாப்பான நகரமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 10 கொலைகள் குறைந்துள்ளதாகவும், மதுரை பொதுமக்களுக்கு பாதுகாப்பான நகரம் எனவும் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் கூறியது:
கடந்த காலங்களில் மதுரையில் ரவுடியிசம், கொலைகள் அதிகளவு நடந்தன. தற்போது கொலை குறைந்து சட்டம், ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மாநகர காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள 72 வார்டுகள் கொண்ட பழைய மதுரை மாநகரில் 33 கொலைகள் நடந்துள்ளன.
இந்த ஆண்டு இப்பகுதிகளில் இதுவரை 23 கொலைகள் மட்டுமே நடந்துள்ளன. மீதமுள்ள 28 வார்டுகள் அடங்கிய புறநகரில் 2014-ம் ஆண்டு 14 கொலைகள் நடந்துள்ளன. இந்த ஆண்டும் இதுவரை அதே 14 கொலைகள்தான் நடந்துள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு மதுரை மாநகரில் 10 கொலைகள் குறைந்துள்ளன. இதற்கு பிரச்சினை ஏற்படும் முன்பே போலீஸாரை அழைத்து பொதுமக்களே தகவல் தெரிவித்தது முக்கிய காரணமாகும்.
நகரில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் போன் வைத்துள்ளனர். அவர்கள் 'வாட்ஸ்ஆப்' மூலம் ஆர்வமாக போலீஸாருக்கு தகவல் அளிக்கின்றனர். இதனால் பிரச்சினைக்கு காரணமானவர்களை போலீஸார் அழைத்து நடவடிக்கை எடுத்ததால் கொலை நடப்பதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை என்றார்.
10 ஆண்டுகளில் குண்டர் சட்டத்தில் கைது அதிகம்
சைலேஷ்குமார் யாதவ் மேலும் கூறுகையில், கடந்த ஆண்டு 94 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்திலும், 6 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 166 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் மதுரையில் இந்த ஆண்டுதான் அதிகம்பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீண்டும் இந்தச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க உடனடியாக அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கொலைகள் குறைவுக்கு குண்டர் சட்டம் கைதும், ரோந்து வாகன போலீஸாரின் கண்காணிப்பு அதிகமானதும் ஒரு காரணம் என்றார்.