

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் எஸ்.வளர்மதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், முசிறி ஆகிய 5 தொகுதிகளில் அதிமுகவும், திருச்சி மேற்கு, திருவெறும்பூர், லால்குடி, துறையூர் ஆகிய 4 தொகுதிகளில் திமுகவும் வெற்றி பெற்றன.
இந்தநிலையில், வரும் தேர்தலில் அதிமுக எம்எல்ஏ-க்கள் 5 பேரில் வெல்லமண்டி என்.நடராஜன் (திருச்சி கிழக்கு), சந்திரசேகர்(மணப்பாறை), எம்.செல்வராசு (முசிறி) ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஸ்ரீரங்கம் தொகுதியில் 2 முறை வென்ற அமைச்சர் எஸ்.வளர்மதிக்குக்கும், மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகனுக்கும் இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மண்ணச்சநல்லூர் தொகுதியில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதிக்கும், ஸ்ரீரங்கம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வாய்ப்பு மறுப்பு ஏன்?
அமைச்சர் வளர்மதி, கட்சியினரில் மிகச் சிலரைத் தவிர பிறரிடம் இணக்கமாக இல்லை என்றும், கட்சியினர் உட்பட அனைவரிடமும் பல்வேறு விஷயங்களில் கறாராக இருந்ததாலும் அவர் மீது அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. அரசு தரப்பில் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகளைத் தாண்டி தனிப்பட்ட முறையில் தொகுதி மக்களுக்கோ, கட்சியினருக்கோ உதவவில்லை, சாலைப் பணிகளைத் தவிர வேறு குறிப்பிடும்படியான எந்தத் திட்டங்களையும் தொகுதிக்குள் கொண்டு வரவில்லை என்றும் தொகுதி மக்கள் குறை கூறுகின்றனர். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தீர்வு காண்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதனால், இந்த முறை அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி பிரச்சாரத்துக்கு வந்தால், கடுமையான எதிர்ப்பைக் காட்ட பல்வேறு கிராமங்களில் மக்கள் தயாராக இருந்ததாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இந்தத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அந்தநல்லூர், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியங்களில் அமைச்சர் வளர்மதி சிபாரிசு செய்த யாரும் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.