

மம்தா மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட அவமானகரமான தாக்குதல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், இரண்டாம்கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுகிறது.
நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (மார்ச் 10) வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கல் செய்த பின்னர் காரில் ஏற முயன்றபோது மம்தா பானர்ஜி சிலரால் தள்ளிவிடப்பட்டுள்ளார். இது தொடர்பாக அளித்தப் பேட்டியில் காரில் ஏற முயன்றபோது தன்னை நான்கைந்து பேர் சேர்ந்து தள்ளிவிட்டதாகவும், இது திட்டமிட்ட தாக்குதல் எனவும் குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட அவமானகரமான தாக்குதல். இத்தகைய குற்றத்தைப் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். இந்த தாக்குதல் குறித்துத் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினர் இணைந்து எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும். மம்தா விரைவில் உடல்நலம் தேற வாழ்த்துகிறேன்"
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.