Last Updated : 10 Mar, 2021 10:12 PM

 

Published : 10 Mar 2021 10:12 PM
Last Updated : 10 Mar 2021 10:12 PM

சிவகங்கையில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் உட்பட அதிமுகவில் கடந்த முறை போட்டியிட்ட 3 பேருக்கும் சீட் மறுப்பு

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் அதிமுகவில் கடந்த முறை போட்டியிட்ட 3 பேருக்குமே மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகள் உள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கையில் அதிமுக சார்பில் தற்போது அமைச்சாராக இருக்கும் ஜி.பாஸ்கரன், காரைக்குடியில் கற்பகம் இளங்கோ, திருப்பத்தூரில் அசோகன், மானாமதுரையில் மாரியப்பன் கென்னடி ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் சிவகங்கையில் ஜி.பாஸ்கரனும், மானாமதுரையில் மாரியப்பன் கென்னடியும் வென்றனர். மற்ற இருவரும் தோற்றனர். இந்நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவளித்த மாரியப்பன் கென்னடி தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் எஸ்.நாகராஜன் வென்றார்.

இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் கடந்த முறை நின்ற ஜி.பாஸ்கரன், அசோகன், கற்பகம் இளங்கோ ஆகியோரது பெயர்கள் இடம்பெறவில்லை.

தற்போது மாரியப்பன் கென்னடி அமமுகவில் உள்ளதால் அவரது பெயரும் இடம்பெறவில்லை. இதன்மூலம் கடந்த முறை போட்டியிட்ட மூன்று பேருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஜி.பாஸ்கரனுக்கு சீட் இல்லை: கடைசி நேர அதிர்ச்சி

சிவகங்கை அமைச்சர் ஜி.பாஸ்கரனுக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பு தரவில்லை. கடைசி நேரத்தில் வேட்பாளர் பட்டியலில் பெயர் மாறியதால் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிவகங்கை தொகுதிக்கு மீண்டும் போட்டியிட ஜி.பாஸ்கரனும், காரைக்குடி தொகுதியில் போட்டியிட அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான செந்தில்நாதனும் முயற்சி செய்தனர்.

அமைச்சர் ஜி.பாஸ்கரன், தொகுதியில் தன் மீது அதிருப்தி இல்லாததால் தனக்கு எப்படியும் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார். மேலும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கட்சிக் கூட்டங்களை நடத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதேபோல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை சிட்டிங் எம்.பி.,யாக இருந்த செந்தில்நாதன் கட்சித் தலைமை கேட்டு கொண்டபடி பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தோடு, தேர்தல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.

இதனால் தனக்கு தான் காரைக்குடி தொகுதி என்ற நம்பிக்கையில் செந்தில்நாதன் இருந்து வந்தார். மேலும் அவர் ஓராண்டிற்கு முன்பே அங்கு தேர்தல் பணிகளையும் தொடங்கினார்.

தனது சொந்த செலவில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் செய்து வந்தார். கட்டுப்பாடுகளுடன் கூடிய கரோனா ஊரடங்கு காலத்தில் காரைக்குடி தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக காய்கறிகளை வழங்கினார்.

இந்நிலையில் ஹெச்.ராஜா காரைக்குடி தொகுதி தனக்கு வேண்டும் என்பதில் விடாபடியாக இருந்தார். இதனால் காரைக்குடி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியது. இதையடுத்து செந்தில்நாதன் அமைச்சர் தொகுதியான சிவகங்கையை குறிவைத்து காய் நகர்த்தினார்.

இதை அறியாத அமைச்சர் தரப்பினர் சிவகங்கை தொகுதி தங்களுக்கே கிடைக்கும் என ஆருடம் கூறி வந்தனர். ஆனால் நேற்று அறிவித்த அதிமுக 2-ம் கட்ட பட்டியலில் சிவகங்கை தொகுதி செந்தில்நாதனுக்கு ஒதுக்கப்பட்டது. கடைசி நேரத்தில் பெயர் மாறியதால் அமைச்சர் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் ஆதரவாளர்கள் சிலர் கூறுகையில், ‘ சிலதினங்களுக்கு முன்பு திடீரென அமைச்சர் மகனுக்கு சிவகங்கை வடக்கு ஒன்றியச் செயலாளர் பதவியை மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் வழங்கினார். இதனால் எங்களுக்கு அப்போதே சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அமைச்சரிடம் தெரிவித்தோம். சீட் நமக்கு தான் கிடைக்கும். தேர்தலுக்கு பிறகு ஒன்றியச் செயலாளர் பதவியை வேறு நபருக்கு கொடுத்துவிடுவோம் என்று தெரிவித்தார்.

ஆனால் அமைச்சர் மகனுக்கு பதவி கொடுத்தது அவருக்கு சீட் மறுக்கத் தான் என்பது இப்போது தான் தெரிகிறது, என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x