Published : 10 Mar 2021 06:09 PM
Last Updated : 10 Mar 2021 06:09 PM

பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் வெளியீடு; சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் குறித்து இன்று அறிவிப்பு வெளியானது.

தமிழகத்தில் வரும் ஏப். 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் பாமகவுக்குதான் முதலாவதாக, பிப். 27 அன்றே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து, பாமக எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த 5-ம் தேதி தனியார் ஹோட்டலில் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டி என்பது குறித்து அதிமுக - பாமக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், நேற்று (மார்ச் 9) பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் அக்கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தொகுதிகள், வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வேட்பு மனுத்தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இன்னும் ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று (மார்ச் 10) வெளியானது. இந்தத் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில், அதிமுக சார்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, பாமக சார்பாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

அதன்படி, அதிமுக கூட்டணியில், செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.

தொகுதிகள் முடிவான நிலையில், பாமக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x