Published : 10 Mar 2021 05:56 PM
Last Updated : 10 Mar 2021 05:56 PM

பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளின் பட்டியல் வெளியீடு; சேப்பாக்கம் போட்டி இல்லை: சென்னையில் 2 தொகுதிகளில் மட்டும் போட்டி

சென்னை

பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சென்னையில் குஷ்பு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சேப்பாக்கம் தொகுதியில் போட்டி இல்லை என்பது தெரியவந்துள்ளது. சென்னையில் 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிடுகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் சென்னையில் மட்டும் சேப்பாக்கம், மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி, துறைமுகம் உள்ளிட்ட தொகுதிகளும், ராசிபுரம், கோவை (தெற்கு), நெல்லை, பரமக்குடி, திருவாரூர், கிணத்துக்கடவு, காஞ்சிபுரம், காரைக்குடி, ராஜபாளையம் உள்ளிட்ட பல தொகுதிகளைக் கேட்டதாகத் தகவல் வெளியானது. இதில் பல தொகுதிகள் தற்போது அதிமுக வென்று வலுவாக உள்ள தொகுதிகள் ஆகும்.

இதில் சேப்பாக்கத்தில் குஷ்புவும், மயிலாப்பூரில் கரு.நாகராஜன் அல்லது கே.டி.ராகவன், ஆயிரம் விளக்கில் கு.க.செல்வம், துறைமுகத்தில் வினோஜ் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் சற்றுமுன் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியானது. இதில் தற்போது பாஜகவுக்கு சென்னையில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. துறைமுகம் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகள் மட்டுமே அந்த இரு தொகுதிகள்.

குஷ்பு போட்டியிடுவார் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், தனக்கான தேர்தல் பணிமனையை குஷ்பு திறந்து பிரச்சாரம் செய்த நிலையில், பாஜகவினர் இறங்கி வேலை பார்த்த சேப்பாக்கம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜக போட்டியிடும் தொகுதிகள் விவரம்:

1. திருவண்ணாமலை, 2. நாகர்கோவில், 3. குளச்சல், 4. விளவங்கோடு, 5. ராமநாதபுரம், 6. மொடக்குறிச்சி, 7. துறைமுகம், 8. ஆயிரம் விளக்கு, 9. திருக்கோவிலூர், 10. திட்டக்குடி (தனி), 11. கோவை தெற்கு, 12. விருதுநகர், 13. அரவக்குறிச்சி, 14. திருவையாறு, 15. உதகமண்டலம், 16. திருநெல்வேலி, 17. தளி, 18. காரைக்குடி, 19. தாராபுரம் (தனி), 20. மதுரை வடக்கு

ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் விரைவில் வரும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x