

சென்னையில் ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்பாத திமுக, அங்கு காங்கிரஸ் போட்டியிட இடம் ஒதுக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸுக்கு அளிக்க மறுத்த திமுக பின்னர் ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்த நிலையில் உள்ளது. காங்கிரஸ் கேட்கும் பல தொகுதிகள் மறுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற 8 தொகுதிகளில் 7 தொகுதிகள் போட்டியிட்டு வென்ற தொகுதியில் முதுகுளத்தூர் தவிர மற்ற தொகுதிகளை காங்கிரஸுக்குத் தர திமுக ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதுகுளத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், இரண்டு வருடங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியைப் புகழ்ந்து பேசினார். அது தற்போது அம்மாவட்ட திமுகவினரால் தலைமைக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் முதுகுளத்தூர் தொகுதியை காங்கிரஸுக்குத் தர இயலாது என திமுக மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
அதே நேரம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் ராஜ கண்ணப்பன் போட்டியிட உள்ளதால் அவருக்காக முதுகுளத்தூர் தொகுதியை ஒதுக்கி வைப்பதாக ஒரு தகவல் திமுக பக்கம் வெளியாகியுள்ளது. தங்களுக்குச் செல்வாக்குள்ள முதுகுளத்தூரை ஒதுக்கித் தாருங்கள் என காங்கிரஸ், திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை ராஜ கண்ணப்பன் திருவாடானை தொகுதியில் நின்றால் முதுகுளத்தூர் தொகுதி காங்கிரஸுக்கு திமுக விட்டுக்கொடுக்கும் எனத் தெரிகிறது. இதேபோன்று திருநாவுக்கரசர் மகன் நின்று தோற்ற அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் தரப்பில் மீண்டும் கேட்கப்பட்டது. கடந்த தேர்தலில் அதிமுக வெல்லக் காரணமாக காங்கிரஸ் மாவட்ட கவுன்சிலர்கள் செயல்பட்டதாலும், அதற்கு அத்தொகுதியின் முக்கியத் தலைவர் துணை நின்றதாலும் அத்தொகுதியைத் தர முடியாது என்றும் திமுக மறுப்பு தெரிவித்தது. பின்னர் பேசி அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸ் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸுக்குத் தரக்கூடாது என அங்குள்ள திமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அம்பத்தூர் தொகுதியில் ஹாருன் ரஷீத் மகன் நிற்பதற்காக அந்தத் தொகுதியையும், மதுரவாயல் தொகுதியையும் காங்கிரஸ் கேட்கிறது. திமுகவைப் பொறுத்தவரையில் 10 தொகுதிகள் வரை நாங்கள் ஒதுக்கும் தொகுதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறுவதாகத் தெரிகிறது.