

பாஜக இன்றி புதுவையில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுவை மாநில பாஜக சார்பில் தலைமைத் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தி சிலை அருகில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் கீழ்தளத்தில் தலைமைத் தேர்தல் அலுவலகம் அமைத்துள்ளனர். இதன் திறப்பு விழா இன்று (மார்ச் 10) நடைபெற்றது. விழாவுக்கு மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், "புதுவையில் எப்படியாவது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை அமைக்க மத்திய அரசு போராடி வருகிறது. பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது எனச் சொன்னவர்கள் இன்று பாஜகவின்றி ஆட்சி அமையாது என முடிவுக்கு வந்து விட்டனர். பாஜகவின்றி புதுவையில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நமக்குக் கூட்டணி அமைய வேண்டும் என்பதே முக்கியம்.
அகில இந்தியத் தலைமை எடுத்துள்ள முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும். புதுவையின் பலம் வாய்ந்த கட்சியாக பாஜக மாறும்" என்று தெரிவித்தார்.