

புதுச்சேரியில் பாஜக 10 இடங்களில் போட்டியிடுவதாக, அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
புதுவை மாநில பாஜக சார்பில் தலைமைத் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தி சிலை அருகில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் கீழ்தளத்தில் தலைமைத் தேர்தல் அலுவலகம் அமைத்துள்ளனர். இதன் திறப்பு விழா இன்று (மார்ச் 10) நடைபெற்றது. விழாவுக்கு மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.
பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசியதாவது:
"புதுவையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். அதில், 16 இடங்களில் ஒரு சின்னத்திலும் (என்.ஆர்.காங்கிரஸ்), 10 இடங்களில் ஓரு சின்னத்திலும் (பாஜக) , 4 இடங்களில் ஒரு சின்னத்திலும், போட்டியிட்டாலும், 30 இடங்களிலும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் வெற்றி பெறுவது உறுதி.
காங்கிரஸ் எந்தத் தொகுதியிலும் ஜெயிக்க முடியாது. டெபாசிட் வாங்குமா என்பதே கேள்வியாக உள்ளது. கருத்துக்கணிப்பில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி அமைத்தால் 28 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறியுள்ளனர். காங்கிரஸே வேண்டாம் என மக்கள் நினைத்துள்ளனர். பாஜக வேண்டும் என அனைத்துத் தரப்பு மக்களும் எண்ணுகின்றனர்.
புதுச்சேரியைக் குட்டிச்சுவராக்கிவிட்டனர். வேலைவாய்ப்பு இல்லை, திட்டங்கள் எதுவும் இல்லை. ரங்கசாமியின் அனுபவம், நமச்சிவாயத்தின் அனுபவத்தை வைத்து 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டும். அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் தொகுதிகளில் பாஜகவினர் உழைக்க வேண்டும். அதேபோல, நாம் நிற்கும் தொகுதிகளில் அவர்கள் பணியாற்றுவார்கள்.
நம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வாக்காக மாற்ற வேண்டும். யார், யார் எத்தனை தொகுதிகள், எங்கு போட்டியிடுகிறோம் என்பது விரைவில் உறுதியாகிவிடும்".
இவ்வாறு நிர்மல்குமார் சுரானா பேசினார்.
நிர்மல்குமார் சுரானா பேச்சில் சூசகமாக பாஜக 10 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் போட்டியிடுகிறது என்பதைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.