கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது மனிதத் தன்மையற்ற செயல்: உயர் நீதிமன்றம் வேதனை

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது மனிதத் தன்மையற்ற செயல் என்று வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவதைத் தடை செய்யவும், சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 10) விசாரணைக்கு வந்தன.

அப்போது, பாதாளச் சாக்கடைகளிலும், கழிவுநீர் தொட்டிகளிலும் விஷவாயு தாக்கி பலியானோரின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த நடைமுறை தொடர்கிறதா? இல்லையா என்பதை மாநில அரசு தெரிவிக்க வேண்டும் என்றனர்.

மனிதத் தன்மையற்ற இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அரசை வலியுறுத்தி, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in