பாஜக, பாமகவுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை: தொகுதிகள் இறுதி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

அதிமுக கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமகவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தொகுதிகள் இறுதிப்படுத்தப்பட்டதாக இருவரும் தெரிவித்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி திமுக, அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை இழுபறிக்குப் பின் உறுதியாகி வருகிறது. திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முழுவதுமாக முடிந்து இறுதிப்படுத்தப்பட்டு விட்டது. அதிமுக கூட்டணியில் முதலில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், அடுத்து பாஜகவுக்கு 20 தொகுதிகளும் உறுதியானது. தேமுதிக, தமாகா இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இதில், பாமகவுக்கு வழங்கிய அதே அளவு இடங்களைத் தங்களுக்கும் வழங்க வேண்டும் என தேமுதிக அடம்பிடிக்க, 15 தொகுதிகள் வரை தருவதாக அதிமுக கூறியது. இதனை ஏற்காமல் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது. கடுமையாக அதிமுகவை விமர்சித்தது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தமாகா கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்நிலையில் பாஜக, பாமகவுக்கு எந்தத் தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. நேற்றிரவு அதிமுக தலைமை அலுவலகத்தில் பாஜக தலைவர் முருகன், கிஷன் ரெட்டி மற்றும் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதிகள் இறுதியானதாக எல்.முருகன் தெரிவித்தார்.

பாஜக பேச்சுவார்த்தை முடிந்து சென்ற பின்னர் பாமக தரப்பில் ஜி.கே.மணி உள்ளிட்டோர் தொகுதகளை இறுதி செய்வது குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ், இபிஎஸ்ஸுடன் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர். இரண்டு மணி நேரம் வரை நீடித்த பேச்சுவார்த்தையில் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை முடிந்து சுமுகமாகப் பேச்சுவார்த்தை முடிந்ததாக பாமக தரப்பில் தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

இரண்டு கட்சிகளுடன் நடந்த ஆலோசனைக்குப் பின் விடிய விடிய ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஆலோசனை நடத்தினர். அதிமுகவில் பிரதான கட்சிகளான பாமக, பாஜக தொகுதிகளை இறுதிப்படுத்தினாலும், கட்சிக்குள்ளே ஆதரவாளர்களுக்கு சீட்டுகளைப் பிரிக்கும் பணியில் அதிமுக இன்னும் ஒருமித்த கருத்துக்கு வரவில்லை என்றே கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in