

அனைத்துத் தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்துக் களம் காண்பது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:
''நாங்கள் தனித்துக் களம் காண்பதற்கு திராவிடக் கட்சிகளுக்கு மாற்று கொண்டுவர வேண்டுமென்பதற்காக மட்டுமல்ல, இந்திய அளவில் ஒற்றைக் கட்சி முறைக்கும் மாற்று ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற கொள்கையை முன்னெடுத்தவர் அண்ணா. ஆனால், மத்தியில் மாறி மாறி இரண்டு கட்சிகள்தான் ஆட்சியில் இருக்கின்றன. அப்படியே மற்ற கட்சிகள் இணைந்தாலும் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கிறதே தவிர கூட்டாட்சியாக இல்லை. ஆகவே, ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி தொடர்ந்து குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைப் பெற்று வருகிறது. அதனால், மக்கள் நீதி மய்யம் தலைமையிலான புதிய கூட்டணியால் எங்களின் வாக்குகள் சிதறும் எனக் கூற முடியாது. வாக்குகள் பிரியும் என்பதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சு. தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் வெறும் வாக்குறுதிகளை மட்டும்தான் வழங்கமுடியும். வாக்குகளை வழங்குவது மக்கள்தான்.
என் மீதுள்ள நம்பிக்கையால் தான் 17 லட்சம் தமிழர்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். ஒப்பீட்டு அளவில் விஜயகாந்த், கமல்ஹாசனைவிட எனக்கு வாக்குகள் அதிகமென்றே நான் சொல்வேன். ஏனென்றால் விஜயகாந்த், கமல்ஹாசன் எல்லோரும் ரசிகர்களைத் தொண்டர்களாக்கிக் கொண்டனர். நான் அப்படிப்பட்ட சினிமா அடையாளம் கொண்டவன் இல்லை. பெரிய அரசியல் பின்புலமும் இல்லை. அதனால், எனது வாக்கு வங்கி பெரிதே.
நான் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காததற்கு மீண்டும் நேருவின் கோட்பாட்டையே மேற்கோளாகக் காட்டுவேன். என்றோ வெல்லும் கோட்பாட்டுக்காக இப்போது தோற்றுப்போவது மேன்மை என்றே நான் கருதுகிறேன்.
ஏனெனில் ஒரு சீட், இரண்டு சீட் என்று சமரசம் செய்து கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. முழு அதிகாரம் இல்லாமல் நம் கனவை நனவாக்க முடியாது. எனக்கு அப்படியொரு முழு அதிகாரத்தை மக்கள் வழங்குவார்கள். இப்போது அந்த அதிகாரத்தை மக்கள் வழங்கவில்லை என்றால் தோல்வி என்னுடையது அல்ல, மக்களுடையதே.
மக்களை ஈர்க்கும் சக்தியாக நாம் தமிழர் உருவாக இப்போதைக்கு எங்களால் கருத்தியல் புரட்சியை மட்டுமே செய்ய முடியும். நல்ல கருத்துகளை விதைத்துவிட்டால் தவறான அரசாங்கம் உருவாகாது என்ற மூத்தோரின் கூற்றின்படி நாங்கள் புரட்சி செய்கிறோம். நிச்சயம் வெல்வோம்''.
இவ்வாறு சீமான் பேசினார்.