தலைமை தேர்தல் அதிகாரி, அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுடன் தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர்கள் ஆலோசனை: வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை

தேர்தல் செலவின கண்காணிப்பு பணியில் ஈடுபடும் துறைத் தலைவர்களுடன் தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர்கள் மதுமகாஜன், பி.ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர். உடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு  படம்: ம.பிரபு
தேர்தல் செலவின கண்காணிப்பு பணியில் ஈடுபடும் துறைத் தலைவர்களுடன் தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர்கள் மதுமகாஜன், பி.ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர். உடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு படம்: ம.பிரபு
Updated on
1 min read

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் நடவடிக்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் சிறப்புப் பார்வையாளர்கள், சென்னையில் தலைமைதேர்தல் அதிகாரி மற்றும் பல்வேறு அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12 தொடங்கி 19-ம் தேதி வரைநடைபெறுகிறது. வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டால்,வேட்பாளர் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் செலவின பார்வையாளர்களின் கண்காணிப்பின் கீழ் வந்துவிடும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை முந்தைய தேர்தல்களின் அனுபவங்கள் அடிப்படையில் செலவின கவனம் பெற்ற மாநிலமாக உள்ளது. எனவே, தமிழகத்துக்கு 2 சிறப்பு செலவின பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரிகளான மதுமகாஜன் மற்றும் பி.ஆர்.பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவுடன் இருவரும் நேற்று ஆலோசனை நடத்தினர். அதன்பின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற வருமான வரி, சுங்கத் துறை, வருவாய் புலனாய்வுத் துறை, மாநில கலால்வரித் துறை, மத்திய ஜிஎஸ்டி மற்றும் கலால் வரித் துறை, காவல்துறை, வங்கித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பொறுப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, வங்கி பணப் பரிமாற்றங்களைக் கண்காணிப்பது, பரிசுப் பொருட்கள், சமையலறைபொருட்கள் கொண்டு செல்லப்படுவதைக் கண்காணிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதற்கிடையே, சிறப்பு செலவினபார்வையாளர்களான மது மகாஜனை 9444376337 என்ற எண்ணிலும், பி.ஆர்.பாலகிருஷ்ணனை 9444376347 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு செலவின விவரங்களை தெரிவிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in