

அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை தேமுதிக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதிமுக கூட்டணியிலேயே தொடர வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் நேற்று கூறியதாவது:
பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களிடம் இருந்து பொருட்களை வாங்கும்படி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னுதாரணமாக இணையதளம் மூலமாக பெண் தொழில்முனைவோரிடம் இருந்து சில பொருட்களை பிரதமர் வாங்கியுள்ளார். பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் பெண் தொழில்முனைவோரிடம் இருந்து பொருட்களை வாங்குமாறு பாஜக மகளிர் அணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக -பாஜக கூட்டணியில் வெற்றிகரமாக தொகுதிப் பங்கீடு நடந்து வருகிறது.
2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக இருந்தது. 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. தற்போது இந்தக் கூட்டணியில் இருந்துவிலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இது வருத்தம் அளிக்கிறது. கூட்டணியில் இருந்து விலகும் முடிவை தேமுதிக மறுபரிசீலனை செய்ய வேண்டும். கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தாலும், அரசியலில் சாத்தியம் இல்லாதது எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அதிகஇடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும்.
மக்கள் தங்களுக்கு தொல்லை தராத அரசு மீண்டும் அமைய வேண்டும் என விரும்புகின்றனர். இதனால் அதிமுக - பாஜக கூட்டணிக்கு மீண்டும் வாக்களிக்கப்பார்கள்.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகள் கேட்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
அதிமுகவால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,500 கண்டிப்பாக தரமுடியும். ரூபாய்க்கு 3 படி அரிசிதருவதாகவும், 2 ஏக்கர் நிலம் தருவதாகவும் கூறி திமுக ஏமாற்றியதுபோல அதிமுக ஒருபோதும் செய்யாது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.