காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்த கும்பகோணம் திமுக எம்எல்ஏ: சமூக வலைதளங்களில் பரவிய கருத்துகளுக்கு எம்எல்ஏ விளக்கம்

கும்பகோணம் சங்கர மடத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்த எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன்.
கும்பகோணம் சங்கர மடத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்த எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன்.
Updated on
1 min read

கும்பகோணம் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த சாக்கோட்டை க.அன்பழகன். இவர்,2011, 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கும்பகோணம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

இந்நிலையில், கும்பகோணத்தில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் தங்கியிருந்து பூஜைகளை செய்துவரும் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை கடந்த 7-ம் தேதி சாக்கோட்டை க.அன்பழகன் மடத்துக்கு சென்று சந்தித்தார்.

அப்போது, தனது தொகுதிக்குட்பட்ட பெருமாண்டி ஊராட்சியில் சங்கர மடத்துக்கு சொந்தமாக உள்ள இடத்தை பொது உபயோகத்துக்கு வழங்கக் கோரி மனுவையும், வஸ்திரம், பழங்கள் ஆகியவற்றையும் சங்கராச்சாரியாரிடம் எம்எல்ஏ வழங்கினார். அப்போது, எம்எல்ஏ அன்பழகனுக்கு பழம், பிரசாதம் கொடுத்து, ஆசி வழங்கினார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, திமுக எம்எல்ஏ அன்பழகன், சங்கராச்சாரியாரை சந்தித்தது குறித்து எதிர்மறையான கருத்துகளை பலர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக எம்எல்ஏ அன்பழகனிடம் கேட்டபோது, ‘‘கும்பகோணம் பெருமாண்டி ஊராட்சியில் சங்கர மடத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இரு தெருக்களுக்கு செல்ல அந்த இடம் தேவைப்படுவதால், அந்த ஊராட்சி மன்றத் தலைவருடன் சென்று மடத்தில் தங்கியிருந்த சங்கராச்சாரியாரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினேன்.

அப்போது அவர் எனக்கு பழங்களை கொடுத்தார். நானும்வாங்கிக் கொண்டேன். கும்பகோணம் தொகுதியில் நான் கட்சி,இன வேறுபாடுகளை கடந்து பழகிவருவதுடன், மக்களின் தேவைகளை அறிந்து என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.

மற்றபடி மடத்துக்கு சென்றதில் வேறு எந்த நோக்கமும் கிடையாது. தேர்தலில் சீட் கிடைக்க வேண்டும் என்றோ, வெற்றி பெற வேண்டும் என்றோ நான் சங்கராச்சாரியாரை சந்திக்கவில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in