

மகா சிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்னிரு சிவாலயங்களை 110 கி.மீ.தூரம் ஓடியபடியே சென்று, பக்தர்கள் வழிபடும் பாரம்பரியமிக்க சிவாலய ஓட்டம் நிகழ்ச்சி இன்று (10-ம் தேதி) தொடங்குகிறது.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்காலத்தில் இருந்தே குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பன்னிருசிவாலய ஓட்டம் வேறு எங்கும் இல்லாத பாரம்பரிய ஆன்மிக நிகழ்வாக உள்ளது. அதன்படி, குறிப்பிட்ட நாட்கள் விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, கையில் விசிறியும், திருநீறு பை சகிதமாக சிவராத்திரிக்கு முந்தைய தினம் தங்கள் ஓட்டத்தை தொடங்குவர். நடப்பாண்டு இன்று அதிகாலையில் புதுக்கடை அருகே உள்ள முஞ்சிறை மகாதேவர் கோயிலில் இருந்து சிவாலய ஓட்டம் நிகழ்ச்சி தொடங்குகிறது.
அங்கிருந்து வரிசையாக திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு மகாதேவர் கோயில், திருநந்திக்கரை சிவன் கோயில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோயில், திருப்பன்றிபாகம் சிவன் கோயில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோயில், மேலாங்கோடு சிவன் கோயில், திருவிடைக்கோடு மகாதேவர் கோயில், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில் ஆகிய கோயில்களை ஓடியே சென்று வணங்குவர். கடைசியாக 12-வது கோயிலான நட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் சிவாலய ஓட்டம் நாளை நிறைவுபெறும்.
மொத்தம் 110 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இந்த சிவாலயங்களை, இன்றும், நாளையுமாக இரு நாட்களுக்குள் கடந்து வழிபடுவதை பக்தர்கள் இலக்காக கொள்வர். இன்று இரவு கோயில்களிலேயே தங்கி, வழிபாட்டு ஓட்டத்தை நாளை தொடர்வர். வயது முதிர்ந்தோரும், இயலாதவர்களும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சென்று வழிபடுவதும் உண்டு. சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறையாகும்.