

கோவை மாவட்டம் மற்றும் கேரளாவில் கரோனா வைரஸ் தொற்றுபரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள தால், மாவட்ட நிர்வாகத்தினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் முடுக்கிவிட்டுள்ளனர். கேரளாவில் இருந்து கோவைக்குள் நுழைபவர்கள், கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளிலும் நேற்று முதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, இரு மாநில எல்லைகளான வாளையார், வேலந்தாவளம், பொள்ளாச்சி, ஆனைமலை, ஆனைகட்டி, வால்பாறையில் உள்ள சோதனைச்சாவடிகள் அருகே சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் இணைந்து சோதனைப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு மருத்துவர் தலைமையில் 5 பேர் கொண்ட சுகாதாரக் குழுவினர் 3 ஷிப்ட்களிலும், இரு உதவி ஆய்வாளர்கள் மற்றும் நான்கு காவலர்கள் கொண்ட குழுவினர் 3 ஷிப்ட்களிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்தே தமிழகம், கேரளா இடையே பேருந்துகள் இயக்கப்படவில்லை. இரு மாநில எல்லை வரை பேருந்துகள் இயக்கப்பட்டு, பின்னர் அந்தந்த மாநிலஅரசுப் பேருந்துகள் மூலம் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின் றனர். நேற்று முதல் அனைத்துபயணிகளுக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக கண்காணிப்புக் குழுவினர் கூறும்போது, ‘‘முதல் நாள் என்பதால் பொதுமக்களிடம் அதிக கெடுபிடி காட்டவில்லை. தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பஅளவை பரிசோதித்த பின்னர் அனுமதிக்கிறோம். இ-பாஸ் மட்டும்முக்கியத்துவம் கொடுத்து கண் காணிக்கப்பட்டு வருகிறது. கேர ளாவில் இருந்து வரும் பேருந்துகள், எல்லையில் நிறுத்தப்பட்டு, பரிசோதனைக்கு பின்னர், உள்ளூர் பேருந்துகள் மூலம் கோவைக்குள் அழைத்துவரப்படுகின்றனர்’’ என்ற னர்.மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறும்போது, ‘‘கேரளாவில் இருந்து கோவைக்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம். அதே சமயம், கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் இல்லை’’ என்றார்.