

`கரோனா' தொற்று பரவலை தடுக்க சென்னையில் மூன்றாவது நாளாக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தொற்று பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆய்வு மேற்கொள்ளும் சுகாதார அதிகாரிகள் முகக்கவசம் அணியாதவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கின்றனர்.
கடந்த 3 நாட்களாக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார்.
நேற்று தி.நகர் பேருந்து நிலையம், புரசைவாக்கம் பகுதிகளில் ஆய்வுசெய்து முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைக் கழுவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் கரோனா தடுப்பூசி மையத்தில் ஆய்வு செய்தார். கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மேற்கு மாம்பலம் சீனிவாசா பிள்ளை தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த அடுக்குமாடி குடியிருப்பை கரோனா தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து நகராட்சியினர் பேனர் கட்டினர்.