

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் நேற்று காலவரை யற்ற உண்ணாவிரதப் போராட் டத்தை தொடங்கினர். சுகாதாரத் துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம் சார்பில் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ‘தமிழக சுகாதாரத் துறையில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் 3,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவ மனைகள், தாலுகா மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிதாக செவிலி யர் பணியிடங்களை உரு வாக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி இப்போராட்டம் அறிவிக்கப் பட்டது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.வசந்தி தலைமையில் நடந்த போராட்டத்தில் பொதுச் செயலா ளர் ஆர்.ராமலட்சுமி, இணை செய லாளர் ஆர்.சிந்தன், கவுரவத் தலைவர் எஸ்.குணசேகரன் எம்எல்ஏ மற்றும் 300-க்கும் மேற் பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்.
உண்ணாவிரதம் பற்றிய தகவல் அறிந்ததும் சங்க நிர்வாகிகளை சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்படி, சங்க நிர்வாகிகள் தலைமைச் செயலகம் சென்றனர்.
செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் தலைமையில் மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ), பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிஎம்எஸ்), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் (டிஎம்எஸ்) சந்திரநாதன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றித் தருவதாக செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார். இதை ஏற்று, உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.