

திருச்சி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்டதாக பறக்கும் படையினரால் நேற்று வரை ரூ.13,15,320 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் அறிவிப்பு பிப்.26-ம் தேதி வெளியானது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், பணம் மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்த விதிமீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை முசிறி தொகுதியில் ரூ.9,31,820, திருவெறும்பூர் தொகுதியில் ரூ.3,83,500 என மொத்தம் 8 பேரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.13,15,320 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்டதாக திருவெறும்பூர் தொகுதியில் 103 சேலைகளையும், ஸ்ரீரங்கம் தொகுதியில் 100 அரிசி மூட்டைகளையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தநிலையில், தாத்தையங்கார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜம்புமடை கைக்காட்டி அருகே இன்று பறக்கும் படையினர் வாகனச் சோதனை நடத்தி, ஒருவர் எடுத்துச் சென்ற ரூ.98,000 ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.