

"பாஜக மதிக்கவில்லை; கூட்டணியிலுள்ள எங்களுக்கு ஒரு இடம் கூட ஒதுக்காததைக் கண்டித்து புதுச்சேரி, காரைக்காலில் 28 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராகி வருகிறோம்" என்று பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ் தெரிவித்தார்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவை திங்கள்கிழமையன்று பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ் சந்தித்து ஐந்து தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்க கோரியிருந்தார். இந்நிலையில் இன்று தொகுதி பங்கீட்டில் பாமகவை பாஜக இணைக்கவில்லை. ஒரு இடமும் ஒதுக்கவில்லை.
இதையடுத்து பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ் கூறுகையில், "புதுச்சேரியில் பாஜக பாமகவை மதிக்கவில்லை. அதனால் புதுச்சேரி, காரைக்காலில் 28 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராகி வருகிறோம்.
இது கூட்டணியில் புதுச்சேரியில் பிளவு ஏற்படுத்தும் செயலை பாஜக செய்துள்ளது. பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு இடங்கள் ஒதுக்க கோரியிருந்த சூழலில் எங்களை பாஜக மதிக்காமல் தொகுதி பங்கீட்டை செய்துள்ளது.
ஒரு இடம் கூட ஒதுக்காதது தவறான போக்கு. தற்போது முதல் கட்டமாக 12 தொகுதிகளின் வேட்பாளரை தயார் செய்துவிட்டோம்" என்று குறிப்பிட்டார்.