

234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும் என, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக செயல் வீரர்கள் கூட்டம், மாவட்டச் செயலாளர் சிவக்கொழுந்து தலைமையில் இன்று (மார்ச் 9) நடைபெற்றது.
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது குறித்து, இக்கூட்டத்தில் பங்கேற்ற விஜய பிரபாகரன் பேசியதாவது:
"உங்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்கிறேன். அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியது. சிங்கம் குகையிலிருந்து வெளியேறியது. இனி வேட்டைதான். இனி நாம் சுதந்திரப் பறவை. தேமுதிகவைக் குறைவாக எள்ளி நகையாடியவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.
தேமுதிகவின் பலத்தை மீட்டெடுக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டியுள்ளது. எனவே, எங்கு நாம் விட்டோமோ அதை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். 10 சதவீத வாக்குகளை மீண்டும் பிடித்து நிரூபிக்க வேண்டும்.
என்னை விஜயகாந்தின் மகனாகப் பார்க்க வேண்டாம். உங்களில் ஒருவனாகப் பாருங்கள். 'நண்பா', 'மச்சான்', 'தோழா' என அழையுங்கள். எனக்கு தன்னம்பிக்கை அதிகம். உங்கள் உறுதுணையோடு எனது தந்தையை சிம்மாசனத்தில் அமரவைப்பேன்.
நம்மைக் குறைத்து மதிப்பீடு செய்து நமக்கு சீட் நிர்ணயிக்கின்றனர். நமக்கு சீட் நிர்ணயிக்க அவர்கள் யார்? விஜயகாந்துக்கு கொடுத்துதான் பழக்கம், வாங்கிப் பழக்கமில்லை. அதிமுக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். 234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும். விருத்தாசலம் மற்றும் பண்ருட்டியில் விஜயகாந்தும், பிரேமலதாவும் போட்டியிட வேண்டும்".
இவ்வாறு விஜய பிரபாகரன் பேசினார்.
பின்னர், நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த விஜய பிரபாகரன், விருத்தாசலத்தில் போட்டியிடுவீர்களா எனக் கேட்டபோது, "கட்சி எங்கு நிற்கச் சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன்" என்றார்.