

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் செயல்பாட்டில் உள்ளன. முதற்கட்டமாக மருத்துவக் களப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேலுள்ள நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட இணை நோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றும் பல மாநில முதல்வர்கள், முக்கிய விஐபிக்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 9) சென்னை, காவேரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இதன்பின் அவர் தன் முகநூல் பக்கத்தில், "கரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டேன்.
குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்" எனப் பதிவிட்டுள்ளார்.