

தேமுதிக உட்பட யார் தங்கள் கூட்டணிக்கு வந்தாலும் அரவணைப்போம் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்தன. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு, தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், நேற்று (மார்ச் 08) அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில், கமல்ஹாசன், சரத்குமார், ரவி பச்சமுத்து, ராதிகா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, மூன்று கட்சிகளின் தலைவர்களும் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தங்கள் கூட்டணியை ’முதல் கூட்டணி என அழைக்க வேண்டும் என, அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கமல் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
யார் வந்தாலும் அவர்களை அரவணைக்க வேண்டியது எங்கள் கடமை. இது மக்களுக்காக வந்திருக்கும் முதல் அணி, முன்னணி. நன்மை பயக்கும் என நினைக்கும் அனைவரையும் நண்பர்களாக பாவித்து அரவணைப்போம்.
தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறீர்களா?
பொன்ராஜ் அழைப்பு விடுத்ததாக நான் செய்தியில் பார்த்தேன். விடுக்கப்பட்ட அழைப்பு அப்படியே இருக்கிறது. அவர்கள் ஆலோசனை செய்துகொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்கள் முடிவெடுத்ததும் சொல்வார்கள்.
உங்களை நோக்கி எந்த கட்சியும் கூட்டணி அமைக்க தயாராக இல்லையா?
காந்தியின் அணியில் மகாராணிக்களும் மகாராஜாக்களும் இல்லை. பிறகுதான் வந்தார்கள். இது மக்களின் அணி. மக்கள் எங்களுக்கு கொடுக்கப்போகும் மரியாதையைப் பார்க்கத்தான் போகிறீர்கள்.
ஸ்டாலினை கடுமையாக விமர்சிப்பதற்கு என்ன காரணம்?
நான் அவர்மீது விமர்சனமே வைப்பதில்லை என இத்தனை நாட்கள் சொல்லிக்கொண்டிருந்தீர்கள். நான் என்ன செய்வது? எனக்கு இவரிவர் எதிரி, மக்களுக்கு இவர்கள்தான் எதிரி என முடிவு செய்துவிட்டோம். இதில் அவர் என்ன, இவர் என்ன? எல்லோரையும் தாக்க வேண்டியதுதான். சுற்றி சுற்றி அடிக்க வேண்டியதுதான். 'மியூசிக்கல் சேரில்' அவர்களும் வந்து உட்கார வேண்டியதிருக்கும்.
ஆளும் கட்சியை தாக்குவதில்லை என்ற விமர்சனம் உள்ளதே?
ஆளும்கட்சியை விமர்சித்தபோது, இவர்களை சொல்லவில்லையே, இருவரும் நண்பர்களா என கேட்டீர்கள். செய்ததற்கான தண்டனை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் என் பரிந்துரை. அதற்கான ஏற்பாடுகளைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். அகற்றப்பட வேண்டியவர்கள் இருவருமே தான். அவர்களைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. தனிப்பட்ட முறையில் பேச வேண்டாம். ஆனால், அவர்கள் செய்ததற்கான பிராயச்சித்தங்களை அவர்கள் தேடிக்கொள்வார்கள், இல்லையென்றால் நாங்கள் கையில் கொடுப்போம்.
கழகங்களுடன் கூட்டணி இல்லை என்றீர்கள். தேமுதிகவும் கழகம் தானே?
நடந்தபிறகு அதற்கு அர்த்தம் சொல்கிறேன்.
234 தொகுதிகளையும் கூட்டணியில் பிரித்து ஒதுக்கிவிட்டீர்கள். இனி கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு எப்படி பங்கிடுவீர்கள்?
கூட்டணிக்கு நல்லவர்கள் வந்தாலும் விருந்தாளிகள் வந்தாலும் இனி எங்கள் பொறுப்பு.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.