Published : 09 Mar 2021 05:10 PM
Last Updated : 09 Mar 2021 05:10 PM

நாட்டின் வளர்ச்சியை எதிர்க்கும் திமுகதான் தேச விரோதி: எல்.முருகன் பேட்டி

தான் தேச விரோதிகள் என்று குறிப்பிட்டது திமுகவைத்தான் என்றும், நாட்டின் வளர்ச்சியை அவர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் மும்முரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு கட்சித் தலைவர்கள் ஊடகங்களைச் சந்தித்துப் பேட்டியளித்து வருகின்றனர். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் 'தி இந்து' ஆங்கிலம் இணையதளத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.

இதில், இந்தத் தேர்தல் தேசியவாதிகளுக்கும் தேச விரோதிகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று எல்.முருகன் கூறினார். யாரை தேச விரோதிகள் என்று குறிப்பிட்டீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது.

இதற்கு எல்.முருகன் அளித்த பதில்:

"திமுகவைத்தான். இதற்கு முன்னாலும் இதைக் கூறியிருக்கிறேன். அவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள். இலங்கையில் 1.5 லட்சம் தமிழர்கள் காங்கிரஸ் ஆட்சியின்போது கொல்லப்பட்டனர். அப்போது திமுக காங்கிரஸை ஆதரித்தது. கந்த சஷ்டி கவசத்தை அசிங்கமாகப் பேசியவர்களுக்குத் திமுகவின் ஆதரவு இருந்தது. ஸ்ரீரங்கத்தில் திமுக தலைவர்கள் தங்கள் நெற்றியில் இருக்கும் குங்குமத்தை அழித்து இழிவுபடுத்தினர்.

அவர்கள் ஏன் தேச விரோதிகள் என்று நான் விளக்குகிறேன். இந்த தேசத்தில் வளர்ச்சி தொடர்பாக என்ன திட்டங்கள் ஆரம்பித்தாலும் அதை அவர்கள் எதிர்க்கின்றனர். அவர்கள்தான் நீட்டைக் கொண்டு வந்தது. ஆனால், இப்போது நீட் வேண்டாம் என்கிறார்கள்.

அதேபோல வேளாண் சட்டங்கள். தங்கள் விளைச்சலுக்கு தாங்களே விலை நிர்ணயிக்க வேண்டுமென்று நீண்டகாலமாக விவசாய சங்கங்கள் கேட்டு வருகின்றன. அதை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். காங்கிரஸ் அதைச் செய்வோம் என்று கூறியது. கடந்த முறை திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அதைக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை.

விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தி, அவர்கள் வருவாயை இரட்டிப்பாக்கும் வகையில் நம் அரசு முடிவெடுத்துள்ளது. திமுக அதை எதிர்க்கிறது. புதிய கல்விக் கொள்கையையும் நாங்கள் கொண்டு வந்தோம். தாய்மொழியில் கற்பிக்கலாம் என்றோம். திமுக நடத்தும் பள்ளிகளில் இந்தியும் ஆங்கிலமும்தான் முதன்மை மொழிகளாகக் கற்றுத் தரப்படுகின்றன. திமுக விவசாயிகளுக்கு எதிரானது, தேசத்தின் வளர்ச்சிக்கு எதிரானது. தமிழ் மக்களுக்கும், மொழிக்கும் எதிரானது. நாட்டின் வளங்களையும் அவர்கள் அழித்துள்ளனர். 2ஜி ஊழல் மிகப்பெரியது.

கோவிட் நெருக்கடி வரும்போதும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து ஓய்வின்றி உழைத்தன. அவர்கள் அதைப் பாராட்ட வேண்டாம். குறைந்தது தினமும் அதை விமர்சிக்காமல் இருக்கலாம். இது தேச விரோதச் செயல் இல்லையா?"

இவ்வாறு முருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x