

குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு பாஜக கட்சியில் எந்த விதமான வேலையோ, பொறுப்போ தரப்படாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல் முருகன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் ஆகிய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் 'தி இந்து' ஆங்கிலம் இணையதளத்துக்குப் பேட்டியளித்துள்ளார். சமூக விரோதச் செயலில் ஈடுபடுவர்கள் பாஜகவில் இருப்பது குறித்தும், அவர்களை ஏன் நீக்கவில்லை என்பது குறித்தும் எல்.முருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்திருக்கும் எல்.முருகன், "ஒரு மிஸ்டு கால் கொடுத்து யார் வேண்டுமானலும் எங்கள் கட்சியில் உறுப்பினராகிவிடலாம். ஆனால், எல்லோருக்கும் நாங்கள் கட்சியில் வேலை தருவதில்லை. குற்றப் பின்னணி இருப்பவர்கள் யாருக்கும் பாஜகவில் வேலை கிடையாது. எனவே, அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் ஏதாவது வேலையோ, பொறுப்போ கொடுத்திருந்தால் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கலாம். ஆனால், நாங்கள் அப்படி எதையும் தரவில்லையே" என்று பதிலளித்துள்ளார்.