Published : 09 Mar 2021 04:24 PM
Last Updated : 09 Mar 2021 04:24 PM

தேமுதிக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் | கோப்புப் படம்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக, பாஜக, பாமக கூட்டணி எதிர்கொள்கிறது. இக்கூட்டனியில் தேமுதிகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக விஜயகாந்த் அறிவித்தார்.

அதிமுகவுடன் 4 சுற்றுகள் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசியும் தாங்கள் கேட்ட தொகுதிகளைத் தர முன்வராததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேமுதிக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், ஏதாவது ஒருவகையில் தேமுதிகவை மீண்டும் பாஜகவுடன் இணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதிமுகவிலிருந்து விலகுவதாக தேமுதிக எடுத்த முடிவு வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.

பலம் எண்ணிக்கை சார்ந்தது இல்லை:

அவர் மேலும் கூறுகையில், "தமிழகத்தில் அதிமுக மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை. மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு சிறப்பான முறையில் மக்கள் நலன் கருதி நிறைவேற்றி வருகிறது.

தமிழக தேர்தலில் அதிமுக கூட்டணியில் எத்தனைக் கட்சிகள், திமுக கூட்டணியில் எத்தனைக் கட்சிகள் என்று எண்ணிக்கை அடிப்படையில் வெற்றியை கணக்கிட முடியாது. தேமுதிக இத்தனை காலம் இந்தக் கூட்டணியில் இருந்தது. ஆகையால் அதன் விலகல் வருத்தமளிக்கிறது. தேமுதிக முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதிமுகவும் கூட்டணியை தக்க வைக்க ஏதாவது செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் உள்ளது.

ஆகையால் வாய்ப்புகள் இல்லை என்ற நிலை இன்னும் வரவில்லை. தேமுதிக விலகலை யாருக்கும் சாதகம், பாதகம் என்று பார்க்கவில்லை. மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி இருந்தது; இப்போது அதிமுக தலைமையில் கூட்டணி உள்ளது. அதனால், தேமுதிகவை தக்கவைக்க வேண்டிய பொறுப்பு அதிமுகவுக்கே இருக்கிறது" என்றார்.

தேமுதிக ஆலோசனை:

இதற்கிடையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் மாவட்டச் செயலாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.தேமுதிக அமமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும், மக்கள் நீதி மய்யத்துக்குச் செல்லலாம் என்றும் பல்வேறு ஊகங்கள் வெளியாகிவரும் நிலையில், வானதி ஸ்ரீனிவாசனின் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

கல்விக்கு முக்கியத்துவம்:

தேமுதிக அதிமுக சிக்கல் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னர், தேர்தல் அறிக்கைகள் குறித்து வானதி ஸ்ரீனிவாசன் தனது கருத்தை முன்வைத்தார். கட்சிகள் மாறி மாறி குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை அறிவித்துவரும் சூழலில் பெண் கல்வி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்திருக்கிறார். ஒரு தேசிய கட்சியின் மகளிரணி தலைவர் என்ற முறையில் அவர் இக்கருத்தை முன்வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x