Published : 09 Mar 2021 04:20 PM
Last Updated : 09 Mar 2021 04:20 PM

விஜயகாந்த் போன்ற தலைவரை மக்கள் தவறு செய்து உட்கார வைத்துவிட்டார்கள்: விஜய பிரபாகரன் பேச்சு

விஜய பிரபாகரன் - விஜயகாந்த்: கோப்புப்படம்

கடலூர்

விஜயகாந்த் போன்ற தலைவரை மக்கள் தவறு செய்து உட்கார வைத்துவிட்டார்கள் என, விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

கேட்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்ததால், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று அறிவித்தார்.

இதையடுத்து, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியதாவது:

"தேமுதிகவைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? இதுவரை விஜயகாத்தைப் பார்த்திருப்பீர்கள், பிரேமலதாவைப் பார்த்திருப்பீர்கள். இனி இரண்டு பேரையும் கலந்து விஜய பிரபாகரனைப் பார்ப்பீர்கள். 'சின்ன பையன்' என்கிறீர்களே. ஆமாம், 'சின்ன பையன்'தான். ஆனால், நல்ல பையன், ஒழுக்கமான பையன். உங்களைப் போன்று காசுக்குப் பின்னல் போகும் கூட்டமல்ல. எங்கள் அப்பா அப்படி எங்களை வளர்க்கவில்லை.

ஒருவர் ஆயிரம் ரூபாய் என்கிறார், இன்னொருவர் 1,500 ரூபாய் என்கிறார். 1,000 ரூபாய் சம்பாதிக்கக்கூட வக்கற்றுக் கிடக்கிறதா தமிழகம்? மக்கள் சிந்திக்க வேண்டும். இலவசங்களைக் கொடுத்து இளைஞர்களை சோம்பேறியாக்குகின்றனர். 'தமிழ், தமிழ்' எனச் சொல்லி தமிழகத்தையே மூடிவிட்டனர். இலவசத்தைக் கொடுத்து மக்களை வீடுகளுக்குள் அடைத்துவிட்டனர். அவர்கள் சொல்வதை நம்பி ஓட்டுப் போடுகிறோம். இதுவரை நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. ஆனால், சம்பாதித்த அனைத்தையும் மக்களுக்குக் கொடுத்தவர் விஜயகாந்த்.

கரோனா காலத்தில் இறந்த மருத்துவர் ஒருவருக்கு அரசே இடம் கொடுக்கவில்லை. விஜயகாந்த் தன் சொந்த நிலத்தை அடக்கம் செய்யக் கொடுத்தார். இப்படிப்பட்ட தலைவரை மக்களாகிய நீங்கள்தான் தவறு செய்து உட்கார வைத்திருக்கிறீர்கள். நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. ஜெகன்மோகன் ரெட்டியைப் பாராட்டுகிறோம். வீட்டுக்கு வீடு ரேஷன் என்ற அவரின் திட்டத்தை 15 ஆண்டுகளுக்கு முன்பே விஜயகாந்த் சொல்லிவிட்டார். அப்போது அவரைக் கிண்டல், கேலி செய்தீர்கள்.

அவர் சொன்ன திட்டங்களை நிறைவேற்றினாலே தமிழகம் வல்லரசாகும். இந்திய நாடுதான் வல்லரசாகும், மாநிலம் ஆகாது எனச் சொல்வார்கள். நான் அப்படிச் சொல்ல வரவில்லை. நமது மாநிலம் வளரும். ஐந்து லட்சம் கோடி கடன் என்கிறார்கள். தேமுதிக எப்போது ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது கடன் அனைத்தையும் அடைக்க வேண்டும் என்பது என் ஆசை. என் அப்பாவிடம் இதைக் கூறுவேன். நாம் ஏன் மற்றவர்களை நம்பி வாழ வேண்டும்?".

இவ்வாறு விஜய பிரபாகரன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x